தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல், விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கூட்டணியை பலமாக நிலைநிறுத்தி இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தாவாக மற்றும் சில அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல்களை கடந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணியுடன் தொடர்கிறது திமுக.
இருப்பினும், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி குரல் எழுப்பி வருவது, அவருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் உள்ளதால் திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என IUML பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற அவர், கடையநல்லூர் தொகுதியை மீண்டும் கேட்டு பெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் திமுக முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே நான்கு சீட்கள் தான் ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் தற்போது இந்த விவகாரமும் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் பிப்ரவரி, மார்ச் வாக்கில் தொடங்கும் என கூறப்படுகிறது.
Read more: இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு அவருக்கு..? ரசிகர்கள் கவலை!



