பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.
இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எந்த கூட்டணிக்குள் இணையப்போகிறது என்பது கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான விவாதமாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்திருந்த பாமக, இம்முறை எந்த கட்சியுடன் இணைகிறது என்பது குறித்து எதுவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில், பாமக எம்எல்ஏ சதாசிவம் இன்று நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “பாமக அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கிய பெருமைக்குரிய தலைவர். அவரின் தலைமையிலான கூட்டணியுடன் நிச்சயமாக பாமக சென்று சேரும்.” என்றார்.
வன்னியர் சமூகத்தின் நலனுக்காக இட ஒதுக்கீடு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்பதையும், அந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படலாம் என்பதையும், சதாசிவம் நேரடியாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கூட்டணியும் அறிவிக்கப்படவில்லை என்பதால், சதாசிவத்தின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.