கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதன் பின்னர் இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டத்தை நடத்தினார். அதில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளரார் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜய், புதிய 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளார். கட்சியின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பணிகள் இக்குழுவின் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என கூறினார். நிர்வாகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாவது:
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நிகழ்ந்த நாளில் தலைவர் விஜய் தாமதமாக வந்ததற்குக் காவல்துறை நடவடிக்கைகளே காரணம். கூட்டநெரிசலுக்குப் பிறகு கரூர் செல்ல முயன்ற தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்,” என்று அவர் கூறினார். தொடர்ந்து “விஜய்யின் பிரசார பயணம் தொடரும். அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்கிறோம்.
எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் நாங்கள் எதிர்கொள்வோம். நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பின்னர் பயணம் குறித்து முடிவு எடுக்கப்படும்,” என நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டங்களில் தவெக கொடி பறந்ததாக கூறப்படும் விவகாரத்தில், “தவெக கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன் இருந்த நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறோம்,” என அவர் தெளிவுபடுத்தினார்.
Read more: ஆதார் பிறந்த தேதி அல்லது குடியுரிமைக்கான சான்றா? மத்திய அரசு விளக்கம்!



