உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கா ஏற்கனவே 25% வரி விதித்திருந்தது. இப்போது அதற்கு மேலாக மேலும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் 40% க்கும் அதிகமான பகுதி ரஷியாவிலிருந்தே பெறப்படுகிறது.
இதனால், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு, இந்தியாவுக்கு பெரிய பொருளாதார சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களும் இதனால் அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக உற்பத்தி மற்றும் விற்பனை வியாபாரத்தில் நேரடியாக தொடர்புடைய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அமெரிக்கா எடுத்துள்ள வரி முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க உணவுப் பொருட்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், இனி ஹோட்டல்களில் பெப்சி, கோக், KFC உள்ளிட்ட அமெரிக்க பிராண்டுகளின் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படாது.
அத்துடன், உணவு டெலிவரி தளங்களான ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ ஆகியவற்றையும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழக உணவகத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வருங்காலத்தில் இது தேசிய அளவிலும் பரவக்கூடும் எனவும் பார்க்கப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தியாவின் லிவ்லி ப்ரொஃபஷனல் யுனிவர்சிட்டி (LPU) நாடு தழுவிய ‘சுதேசி 2.0’ பிரச்சாரத்தை தொடங்கியது. பல்கலைக்கழகத்தின் சென்சலர் டாக்டர் அசோக் குமார் மித்தல், கோகோ கோலா போன்ற அமெரிக்க குளிர்பானங்களை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.