சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, அதற்கான அரசாணையை கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் எனக்கூறி, அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கம் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தலைமைச் செயலகத்திற்கான மாற்று இடமாக சென்னை தீவுத்திடல் அருகே அமைந்துள்ள ‘பல்லவன் இல்லம்’ வளாகத்தை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அங்குள்ள சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்புதிய திட்டத்தின்படி, அனைத்து அரசு நிர்வாகக் கட்டடங்களும் பல்லவன் இல்ல வளாகத்தில் கட்டப்படலாம் எனவும், சட்டப்பேரவை மட்டும் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்து செயல்படும் வகையிலும் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பல்லவன் இல்ல வளாகத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (SETC) பணிமனைகள் செயல்பட்டு வருவதால், அந்தப் பணிமனைகளை நகரின் பிற மாற்று இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகளால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



