திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுத்துத் தரக் கோரியும் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த அரை நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று, பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களாக உருவெடுத்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதே வேளையில் திருமணம் தங்களது பணி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடுமோ என்ற அச்சத்தால் பல பெண்கள் திருமணத்தை தவிர்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டனர்.
இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், குடும்பப் பராமரிப்புப் பணிகளை பெண்களின் தலையில் மட்டுமே சுமத்தாமல் கணவர்களும் சரிசமமாக பகிர்ந்துகொண்டால் இந்த நிலைமை மாறக்கூடும் என்றனர்.
சமுதாயத்தில் ‘House Wife’ இருப்பதை இயல்பாக ஏற்கும் அதே மனப்பான்மையுடன், தேவைப்படும் சூழலில் ‘House Husband’களும் இருக்க முடியும் என்பதை இயல்பான ஒன்றாக சமூகம் ஏற்க வேண்டும் எனவும், இது விவாகரத்துகளை தவிர்த்து திருமண பந்தத்தை வலுப்படுத்த உதவும் எனவும் சுட்டிக்காட்டினர். இல்லத்தரசியாக இருந்து பெண்களால் ஆற்றப்படும் வீட்டுப் பணிகளுக்குத் தனித்துவமான பொருளாதார மதிப்பு இருப்பதை உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் நினைவுபடுத்தினர்.



