அமித்ஷா சொல்வதே எனக்கு வேத சத்தியம் எனவும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக பாஜக கூட்டணி உருவானதில் எனது பங்கு எதுவும் இல்லை.. கூட்டணி பேச்சுவார்த்தையில் எனது பங்கு இல்லை.. நான் பாஜக தொண்டன் மட்டுமே.. கூட்டணி ஆட்சி என அமித்ஷா மிகத்தெளிவாக சொல்லிவிட்டார். 1 முறை, 2 முறை அல்ல 3வது முறையாக கூறிவிட்டார். அவரது கருத்தையே நான் பேசுகிறேன்.. அமித்ஷா பேசியதை நான் எப்படி மாற்றிப் பேச முடியும்..
கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் சொன்னால், இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கக்கூடாது.. எனது தலைவர்கள் சொல்லாத வரை நான் எப்படி மாற்றி பேச முடியும்… அமித்ஷா சொல்வதே எனக்கு வேத சத்தியம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும்.. பாமக, தேமுதிக கட்சிகள் கூட கூட்டணி ஆட்சி பற்றி பேசத் தொடங்கிவிட்டனர்
கூட்டணி ஆட்சி குறித்து அதிமுகவினருக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷா உடன் பேச வேண்டும்.. எனது தலைவர்கள் சொல்வதை தான் நான் சொல்ல முடியும்.. தங்கள் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்.. கூட்டணி ஆட்சி கருத்தை தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என விட்டுவிட முடியாது..” என்று தெரிவித்தார்..
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது முதலே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித்ஷா தொடர்ச்சியாக கூறி வருகிறார்.. ஆனால், தனித்தே ஆட்சியமைப்போம் என்று அதிமுக கூறி வருகிறது.. இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த சூழலில் நேற்று இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி “ கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை.. நான் எடுப்பது தான் முடிவு.. கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரம் பாஜகவுக்கு இல்லை..
எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னார். கூட்டணி ஆட்சி என்று தவறாக புரிந்துகொண்டீர்கள்.. நான் தெளிவாக கூறிவிட்டேன்.. அதிமுக தான் பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என்று பல முறை கூறிவிட்டேன். அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது.. 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைப்பது உறுதி..” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சூழலில் மீண்டும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று அண்ணாமலை கூறியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வந்தால் அதிமுக இரண்டாக உடையும்.. அடித்து சொல்லும் திமுக முக்கிய புள்ளி..



