2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி அமைப்புகள் குறித்த குழப்பம் தொடர்கிறது. பாஜகவுடன் ஏற்கனவே டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வரும் நிலையில், அமமுக கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி நிலவி வருகிறது.
இதற்கிடையே மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழகம் வரும் பிரதமரை இந்த முறை சந்திக்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் நிச்சயமாக அமமுக சார்பாக நடக்கும்,” எனத் தெளிவாகக் கூறிய தினகரன், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “எடப்பாடியுடன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லாது; உரிய நேரத்தில் நான் சொல்வேன். இன்னும் ஆறு மாதங்கள் பொறுங்கள். பின்னர் யார் யாருடன் உள்ளார்கள் என்பதெல்லாம் தெரியும்,” எனக் கூறினார்.
அதே நேரத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிபந்தனையற்ற ஆதரவுடன் இருந்தது. 2026 தேர்தலுக்கும் அதே நிலை தொடரும் என்றார். “பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியா?” என்ற கேள்விக்கு பதில் அளித்த தினகரன், “முதல்முறையாக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள், ஆட்சி அதிகாரங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கும்போது தான் ஊழலற்றத் திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.
“அதிமுகவினர் தனித்து ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்களே” என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியுள்ளேன், அமித் ஷாவின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடு. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை” எனக் கூறினார்.
தவெக கூட்டணியில் அமமுக இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “யூகங்களுக்கு எல்லாம் நான் ஜோசியம் பார்த்து பதில் சொல்ல முடியாது. இன்னும் 6 மாதம் பொறுங்கள். டிசம்பர் – ஜனவரி மாதத்தில் எல்லா கூட்டணிகளிலும் இறுதிக்கட்ட நிலை வந்துவிடும். 2026 சட்டசபை தேர்தலில் உறுதியாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்து விடுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Read more: 8-வது ஊதியக் குழு… அரசு ஊழியர்களுக்கு இரவோடு இரவாக வந்த செய்தி…! என்ன தெரியுமா…?