சென்னையில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி இருந்த ஆயுர்வேத கல்லூரி மாணவி, விடுதியில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி, கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். உடல்நலக் காரணமாக அவர் சமீபத்தில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை வந்தார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அவர் அறை எடுத்து தங்கி வந்தார்.
தனது அறையில் நெட்வொர்க் கிடைக்காததால், இரவு நேரம் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பக்கத்து அறையில் தங்கியிருந்த ஒருவர் மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். மாணவி கத்தி கூச்சலிடவே குற்றாவாளி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டவர் செங்குன்றத்தைச் சேர்ந்த டிரைவர் சுகேந்திரன் (31) என தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சுகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் வைக்கப்பட்டார். விடுதியில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.