மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், பல மாதங்களாக குப்பைகள் நிறைந்த ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல அமைப்பின் தலைவர் நேரடியாக வேலை வாய்ப்பு ஆஃபர் கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி (என்கிற பிட்டு தபாஹி), தன் சொந்த செலவில் (சுமார் ₹30,000) அஜ்னார் (Ajnar) ஆற்றில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாசிகள் மற்றும் கழிவுகளை ஜனவரி மாதம் முதல் தனியாளாகச் சுத்தம் செய்து மாற்றிக்காட்டியுள்ளார்.
கடல்கள் மற்றும் நதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் ‘தி ஓஷன் கிளீனப்’ (The Ocean Cleanup) என்ற நெதர்லாந்து அமைப்பின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வான போயன் ஸ்லாட் (Boyan Slat), எக்ஸ் தளத்தில் பிட்டுவின் புகைப்படங்களைப் பார்த்து “எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்” என நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ‘லைக்குகளுக்காக தான் இவர் இதைச் செய்கிறார்’ எனச் சிலர் விமர்சித்த போது, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கடந்த மார்ச் மாதமே இவரைப் பாராட்டி, “சமூக வலைதள மோகம் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்பட்டால் அது வரவேற்புக்குரியதே” எனப் பதிவிட்டிருந்தார்.
சுரேந்திர சிங்கின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரமும், அவரது வாழ்க்கையையே மாற்றக்கூடிய இந்த வேலை வாய்ப்பும் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்று வருகிறது.



