ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அதிக விலைக்கு பால்பொருட்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதன்பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறுவனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறுவனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை.
பால்பொருட்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.ஆவின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருட்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆகியுள்ளது. இது 36% உயர்வு ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருட்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருட்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.