செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை இழந்து விட்டார். இந்த நிலையில் செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் மணல் கொள்ளையர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அவர்கள் துணிச்சல் பெற்று செய்தியாளரைத் தாக்குவதற்கு காரணமாகியுள்ளது. ஒருபுறம் காவல் நிலைய மரணம், இன்னொரு புறம் செய்தியாளர்கள் மீது தாக்குதல், கட்டுப்படுத்தப்படாத பட்டாசு ஆலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது தமிழ்நாடா… இல்லை காடா? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.
செய்தியாளர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஒரு மாநிலத்தில் நிலவும் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்று தான் பொருள். தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் செய்தியாளரைத் தாக்கிய செம்மண் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Read More: சேமிப்புக் கணக்கு இருக்கா ? இனி இதற்கு அபராதம் இல்லை! குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி!