உத்தரபிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த விஸ்வகர்மா சவுஹான் – மம்தா தம்பதியினர், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மம்தா தனது 13 வயது மகளுடன் கணவரை விட்டு பிரிந்து, ஷாபூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். வாழ்வாதாரத்திற்காக தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் அவர், தினசரி வாழ்க்கையை கடந்து வந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 5ம் தேதி இரவு 8 மணியளவில் மம்தா ஷாபூர் மார்க்கெட்டில் உள்ள பிரபலமான போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கிருந்து வெளியேறியபோது திடீரென வந்த கணவர் விஸ்வகர்மா, அவரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டை கடுமையாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த விஸ்வகர்மா, ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை குறிவைத்து சுட்டார்.
கழுத்து மற்றும் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மம்தா சம்பவ இடத்திலேயே ரத்தத்தில் சுருண்டு விழுந்தார். பொதுமக்கள் அவசரமாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மார்க்கெட் பகுதியே பரபரப்பாக இருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் ஓடோடி பீதி அடைந்தனர். ஆனால் மனைவியை சுட்ட விஸ்வகர்மா அசையாமல் அதே இடத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டிருந்தார். “மம்தா என்னை எப்போதும் தொந்தரவு செய்தார்” என அவர் திரும்பத் திரும்ப கூறியுள்ளார். பின்னர் அங்கு வந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிக்குள் ஏற்பட்ட உண்மையான பிரச்சினை என்ன என்பதில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: வீட்டில் எப்ப பார்த்தாலும் சண்டை வருதா? பணம் தங்கலையா? இந்த வாஸ்து குறைபாடு காரணமாக இருக்கலாம்!