தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். ஜனவரி 9-ல் கடலூரில் நடக்கும் மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எடப்பாடி பழனிச்சாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு. தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். அதுவரை எங்கள் கட்சி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். ஜனவரி 9 ஆம் தேதி வரை சற்று காத்திருங்கள். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. அது செயல்படுத்தும் போது தான் அதன் நிறை குறைகள் தெரியும். தே.மு.தி.க-வுடன் அனைத்து கட்சியினரும் நட்போடு தான் பழகி வருகிறார்கள். ஆனால் கூட்டணி என்கிற வார்த்தைக்குள் நாங்கள் செல்லவில்லை. ஜனவரி 9 ஆம் தேதி தான் அதற்கான விடை தெரியும்.
எம்.ஜி.ஆருக்கு பின் விஜயகாந்த் தான் மக்கள் தலைவர் என்பதை உலகம் ஏற்றுகொண்டுள்ளது. அவர் குறித்து அரசியலுக்கு வருபவர்கள் யாரும் பேசாமல் இருக்க முடியாது. விஜயகாந்த் குறித்து புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட பேசுவது மகிழ்ச்சி தான். 2005 ஆம் ஆண்டு நடந்த தே.மு.தி.க மாநாடு இன்றும் சரித்திரமாக உள்ளது. எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. த.வெ.க மாநாட்டில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தார்கள். அனைத்தையும் குறையாகவே பார்க்க கூடாது என தெரிவித்தார்.