நேபாளத்தில் உள்ள ‘இம்லுங் இமால்’ (Himlung Himal) மலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில், நார்பூ பகுதியில் அமைந்துள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள இம்லுங் இமால் மலையின் அடிவார முகாமில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேற்ற வழிகாட்டிகள் மற்றும் உதவியாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை பனிச்சரிவு மொத்தமாக மூடியதில், அங்கிருந்த 16 பேர் பனிக்குள் புதையுண்டனர்.
இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் தலா 2 உடல்களும், புதன்கிழமை 3 உடல்களும் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை மேலும் 8 உடல்கள் பனியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன.
காத்மாண்டூவில் இருந்து சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு இமயமலைப் பயணங்களுக்கான முன்ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும், பாதைகளைச் சீரமைப்பதற்காகவும் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் பணியாளர்களே இதில் சிக்கியுள்ளனர்.
தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாகவே இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாயமான மேலும் ஒருவரைக் கண்டறிய 14 பேர் கொண்ட நிபுணர் மீட்புக் குழு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பாதிப்புகளிலிருந்து நேபாளம் இன்னும் மீளாத நிலையில், இந்த பனிச்சரிவு பேரழிவு மலையேற்ற சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



