நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது..
பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்..
தமிழ்நாட்டின் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தவெக தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை மே 13-ம் தேதி அன்றோ அதற்கு முன்னரோ நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அறிவுறுத்தி இருந்தார்.. அதன்படி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.. தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உரையாற்றினர்..
திமுக, பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மீதமிருந்த கட்சி உறுப்பினர்கள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.. அதன்படி தவெகவுக்கு ஆதரவாக 140 பேரும், அரசுக்கு எதிராக 14 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. எனவே முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தார்.. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது..



