வரதட்சணை கொடுமையால் கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது இதே போன்றதொரு சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது..
கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரி என்ற பெண்ணுக்கும் நிதின் ராஜுக்கும் 26 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.. 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.. பெண் வீட்டார் சார்பில் ரூ.7 லட்சம் ரொக்கம், 50 சவரன் தங்க நகை, ரூ.50 லட்சம் மதிப்பிலான வீடு, சீர் வரிசை, இரு சக்கர வாகனம் என ரூ.1.5 கோடி மதிப்பில் வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது..
இந்த சூழலில் பெண் வீட்டிற்கு நேற்று மதியம் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது ஜெபிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இந்த நிலையில் தங்கள் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, கணவர் வீட்டார் பெண்ணை அடித்துக் கொன்று விட்டதாக பெண் வீட்டார் குற்றம்சாட்டி உள்ளனர்.. மேலும் 50 சவரன் நகைகளை அபகரித்து விட்டு பெண்ணை கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.. நிதின் ராஜ் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யமாட்டோம் என உடலை வாங்கமாட்டோம் என பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் பேசிய போது “ பணத்திற்காக என் மகளை பயன்படுத்தி, கொன்று விட்டனர்.. திருமணமானதில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.. தினமும் என் மகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்.. நிதின் ராஜ் மற்றும் அவரின் அக்கா அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.. என் மகளின் சாவுக்கு காரணமான 6 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எனக்கு நீதி வேண்டும்” என்று தெரிவித்தார்..