சிவகங்கை மாவட்டத்தில் நகை திருட்டுப்போனதாக கூறப்படும் வழக்கு ஒன்றில் 27 வயது கோயில் பாதுகாவலரான அஜித்குமார் என்பவரை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கோபத்தில் மூழ்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் காவல்துறையின் மிருகத்தனத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 2 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியான இந்த சிசிடிவி காட்சிகளில், தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோரிக்ஷா ஓட்டுநரான ரமேஷ் (34) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலர்கள் பலமுறை கொடூரமாக அடிப்பதை காணலாம். இந்த காட்சிகள் மாநிலம் முழுவதும் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த பொதுமக்களின் கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டுள்ளன.
ஆதாரங்களின்படி, இந்த சம்பவம் ஜனவரி 14 ஆம் தேதி அரிசிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர் ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் புகார்களின் அடிப்படையில், குடிபோதையில் இருந்த ரமேஷை ஒரு போலீஸ் குழு கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பிரம்பால் தாக்கியதாகவும், பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 296 இன் கீழ் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?. தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்துக்கு விண்ணப்பித்தார்.
இந்நிலையில் அவருக்கு அந்த சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருந்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவ பிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், காவல் ஆய்வாளர் கே. அப்துல்லா, துணை ஆய்வாளர் சிவ சம்பு, தலைமை காவலர் எஸ். பாண்டியன், காவலர்களான மாரிச்சாமி மற்றும் வாலிராஜன் ஆகியோர் ஆயுதப்படை (ஏஆர்) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.