பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-வின் கீழ் கூடுதலாக 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ் கூடுதலாக 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்துறை செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கதிகிதலா தலைமையில் அக்டோபர் 15 அன்று நடைபெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தின் போது இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.
புதிதாக 1,40,942 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. இது அனைவருக்கும் வீடு என்ற அரசின் உறுதிப்பாட்டை உறுதிசெய்கிறது.அசாம், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, ராஜஸ்தான், தமி்ழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஹரியானா, ஒடிசா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் கட்டப்படும் போது அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை செயலாளர் கேட்டுக்கொண்டார். பயனாளிகளின் எளிதான வாழ்க்கையை உறுதிசெய்வதற்காக போதிய உள்கட்டமைப்பு, சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து வசதிகள் உறுதிசெய்யப்பட்ட பிறகு இத்திட்டங்கள் இறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-வின் கீழ் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு 1 கோடி குடும்பத்தினருக்கு ரூ. 2.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.