நடப்பு நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு
உஜ்வாலா திட்டம் (பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா – PMUY) என்பது, இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இதன் முக்கிய நோக்கம், சுத்தமான சமையல் எரிவாயுவை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம், சமையலறைகளில் புகையின்றி ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதாகும். 2016-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 5 கோடிக்கும் அதிகமான எல்பிஜி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, மேலும் இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பை வழங்குவதற்காக பிரதமரின் உஜ்வாலா திட்டம் எனப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், மே 2016-ல் தொடங்கப்பட்டது. 01.11.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் இத்திட்டத்தில் சுமார் 10.33 கோடி இணைப்புகள் உள்ளன.
மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடித்து, நாட்டில் எல்பிஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில், 2025-26-ம் நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. தகுதி அளவுகோல்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



