ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர். ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும். வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம். அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு.
மேலும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு வாடகைதாரர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உரிமையாளர் நீதிமன்றத்தில் முறையிடலாம். மேலும் வாடகைதாரர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தொந்தரவு செய்பவராக இருந்தாலோ அல்லது வீட்டில் தங்காமல் 4 மாதங்களுக்கு வீட்டை பூட்டியிருந்தாலோ அல்லது ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் எதையும் வீட்டில் செய்வது தெரிந்தாலோ அவர்களை வீட்டை விட்டு காலி செய்யலாம்.
இதேபோல வீட்டில் சரியான முறையில் தண்ணீர் வசதி, மின்சார வசதி போன்ற அத்தியாவசியமான வசதிகளில் குறைபாடு இருந்தாலோ அல்லது வசதி நிறுத்தப்பட்டாலோ அல்லது காரணமே இல்லாமல் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னாலோ வாடகைதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தீர்ப்பின் அடிப்படையில் உரிமையாளரிடமிருந்து உங்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறலாம்.
இப்படி இருக்கையில், பெங்களூரில் ஒரு வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் இருந்து ரூ. 82,000 கழித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை மிகவும் மன வருத்தத்துடன் அந்த வீட்டில் குடியிருந்தவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாவில் 2 BHK அப்பார்ட்மெண்டில் குடியிருந்துள்ளார், வீட்டிற்கு முன்பணம் 1.5 லட்சம் கொடுத்துள்ளார். வீட்டின் உரிமையாளரிடம் இரண்டு வருடங்களில் அதிகமாக பேசியதில்லை என்றும், அந்த அப்பார்ட்மெண்டின் மேலாளருடன் மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 13 வது மாடியில் இருப்பதால் அவ்வப்போது வீட்டில் ஏற்படும் பழுது வேலைகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் மாற்றுவது போன்றவற்றை தனது சொந்த செலவில் செய்துள்ளார்.
இதற்காக வீட்டின் உரிமையாளருக்கு பில் கொடுத்த போதிலும் அவர் அதற்கான தொகையை கழிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் வீட்டை காலி செய்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டை சுத்தம் செய்ய மற்றும் பெயிண்ட் அடிக்க 55,000 ரூபாயையும், வீட்டின் பராமரிப்பு செலவுக்காக ரூபாய் 25,000 பிடித்து விட்டு 1.5 லட்சம் அட்வான்ஸ் தொகையில் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். பெங்களூரில் மட்டுமல்லாமல் சென்னையிலும் இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால் வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் அட்வான்ஸ் தொகை கொடுக்கும் முன்பு வீட்டு உரிமையாளரிடம் அனைத்தையும் விரிவாக பேசிவிட்டு குடியேறுவது நல்லது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Read more: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி…!