மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவன், நீரில் இருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தை கிராமத்துக் குளத்திலேயே கழித்து வருகிறான். இரவும் பகலும் நீரிலேயே இருக்கும் அச்சிறுவனுக்கு ஊர் மக்கள் உணவைக் குளத்திலேயே வழங்கி வருகின்றனர். குடும்பத்தின் நிதி நெருக்கடியால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ள நிலையில், இது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம் அல்ல என்றும், முறையான மருத்துவப் பரிசோதனையே இதற்குத் தீர்வு என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இச்சம்பவத்தைக் கண்டறிய நேரில் பரிசோதனை அவசியமானது என்றாலும், நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த ‘எரித்ரோமெலால்ஜியா’ (Erythromelalgia) என்ற அரிய வகை குறைபாடாக இது இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்பத்தால் கடுமையான எரிச்சலும் சிவந்துபோதலும் ஏற்படும் என்பதால், குளிர்ச்சியான நீரில் இருக்கும்போது தற்காலிக நிவாரணம் கிடைக்கும். மேலும், தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது தோலில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும் ‘அக்வாஜெனிக் புரூரிடஸ்’ (Aquagenic pruritus) அல்லது நரம்புகள் சேதமடைவதால் ஏற்படும் ‘பெரிஃபெரல் நியூரோபதி’ (Peripheral neuropathy) போன்ற பாதிப்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
குளத்திலேயே தங்கியிருப்பதால் ஏற்படும் ஆரோக்கிய ஆபத்துகள் : தண்ணீர் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், தொடர்ந்து குள நீரில் இருப்பது மிகவும் ஆபத்தானது எனத் தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் நீரில் மூழ்கியிருப்பதால் தோல் நிறமிழந்து, மென்மையாகி, வெடிப்புகள் மற்றும் கிருமித் தொற்றுகளுக்கு எளிதில் ஆளாக நேரிடும். அசுத்தமான குளத்து நீர் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் தீவிரமடையும் ஆபத்தும் உள்ளது. ஏற்கெனவே அச்சிறுவனுக்குக் கைகால்களில் தோல் நிறமாற்றம், சளி மற்றும் இருமல் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறுவன் தண்ணீரிலேயே இருந்து உணவு, நொறுக்குத்தீனி சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதைக் கண்ட ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார். அதன்படி, சிறுவன் விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டு ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



