திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியக் கிடாக்கறி விருந்துத் திருவிழா நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்களுக்கு அனுமதியின்றி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.
நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடி பொன்னர் சங்கர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் இந்த வினோத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவில், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய 101 ஆடுகள் சுவாமிக்குப் பலியிடப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து, சமையல் பணிகளை மேற்கொண்டனர்.
சமையல் நிறைவடைந்ததும் சுவாமிக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பொன்னர் சங்கர் சுவாமிக்குப் படைக்கப்பட்ட உருண்டைச் சோறு, மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்ட நிலையில் வானத்தை நோக்கி வீசப்பட்டு வழிபாட்டுச் சடங்கு நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னரே, வருகை தந்திருந்த பக்தர்களுக்கு உருண்டைச் சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்து பரிமாறப்பட்டது.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் பாதசிறுகுடி, நத்தம், குட்டுபட்டி, குமரபட்டி, புதூர், குட்டூர் மற்றும் மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.


