கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஹாசன் நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஹாசனில் இருந்து ஹோலேநரசிபுரா நோக்கி அதிவேகமாகச் சென்ற ஒரு லாரி, திடீரென எதிரே வந்த ஒரு பைக் ஓட்டுநரைக் காப்பாற்ற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் பின்னர், ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையின் போது இரண்டு பேர் உயிரிழந்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியின் அதிவேகம் மற்றும் அதன் ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறையினரின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார். விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் தூரத்திலிருந்து தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது போலீசார் இல்லை. 25 பேர் காயமடைந்துள்ளனர். எஸ்.பி. இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காவல் துறையின் தோல்வியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.