ஜம்மு காஷ்மீரில் அரசு நிர்வாகத்தின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகத் துறை ஆணையர் செயலாளர் எம். ராஜு பிறப்பித்த இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. அரசு துறைகளிலும், மாவட்ட துணை ஆணையர் அலுவலகங்களிலும் பென் டிரைவ், வாட்ஸ் அப் உள்ளிட்ட வெளிப்புற சேமிப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல்களின் மூலம் தரவுகள் வெளியேறுவதற்கான அபாயங்களைத் தடுக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளின் ரகசிய தகவல்களை வாட்ஸ்அப், பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகள் அல்லது பிற தகவல் பகிர்வு தளங்கள் வழியாக பகிர்வதோ, சேமிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. தரவுகள் வெளியேறுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதால், எந்த வகையிலும் பாதுகாப்பற்ற செயலிகள் பயன்படுத்தப்படக் கூடாது என உத்தரவு வலியுறுத்துகிறது.
அரசுத் துறைகளுக்கு அவசர தேவையாக இருந்தால், அந்தந்த நிர்வாகத் தலைவர் வழியாக மாநில தகவல் அதிகாரி – தேசிய தகவல் மையத்திடம் அனுமதி பெற வேண்டும். அத்தகைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஒரு துறைக்கு அதிகபட்சம் 2–3 பென் டிரைவ்கள் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
பென் – டிரைவுக்கு பதிலாக, அரசு ‘டிரைவ்’ எனப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும். இது, கிளவுட் அடிப்படையிலான சேவை. இதில், ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 50 ஜி.பி., இடம் ஒதுக்கப்படும். அரசு அலுவலக தொடர்பான தகவல்களை இந்த அமைப்பில் பாதுகாப்பாக சேமிக்கலாம். அரசு தகவல்களை வாட்ஸாப் செயலி வாயிலாக பரிமாற தடை விதிக்கப்படுகிறது.
மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறுவது கடுமையான குற்றமாகக் கருதப்படும். சம்பந்தப்பட்ட அரசு பணியாளர்களுக்கு எதிராக தொடர்புடைய விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தவும், முக்கியமான அரசுத் தரவுகளை பாதுகாக்கவும், தரவு மீறல் அபாயங்களைத் தடுக்கும் வகையிலுமே இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



