காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்த பந்த் போராட்ட அறிவிப்பு இருந்தாலும், கர்நாடகா முழுவதும் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகள் வழக்கம்போலவே இயங்கி வருகின்றன. பொதுமக்கள் அமைதி காக்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் பெங்களூரு நகர காவல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், கர்நாடக பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.
மேலும், கர்நாடகாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்காமல், ‘நன்னடத்தை ஆதரவு’ மட்டுமே அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதனால் BMTC, KSRTC பேருந்துகள், நம்ம மெட்ரோ மற்றும் ஆட்டோ-டேக்சிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
காவேரி பிரச்சனையில் எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒசூர் வழியாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் அரசுப் பேருந்துகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், பெங்களூரு கேம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும், டேக்சி சேவைகளும் எவ்வித பாதிப்புமின்றி சீராக நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கையாக விமான நிலைய வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



