தமிழகத்தில் அரசு வேலைக்காக லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட குரூப்-2 தேர்வில் 41 பணியிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் காலியிடங்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பின்படி, இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 41 இடங்களும், குரூப்-2ஏ பதவிகளுக்கு 780 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
குரூப்-2 தேர்வுக்கு வழக்கமாக பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் நிலையில், 41 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது போட்டியை கடுமையாக்கும் என தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை போட்டித் தேர்வுகளை எழுதிவரும் சூழலில், அதிக பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். குரூப்-2 பிரிவில் உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 14 வகையான பதவிகள் உள்ளன. ஆனால், இந்தப் பதவிகளில் பெரும்பாலானவற்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அரசு அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. சில துறைகளில் பலர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே கவனிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் த.அமிர்தகுமார், அனைத்து வகையான அரசுப் பணியிடங்களையும் கணக்கில் எடுத்தால் சுமார் 4.5 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நிதிச்செலவு உள்ளிட்ட காரணங்களால் சில காலியிடங்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அதிக எண்ணிக்கையிலானோர் எழுதும் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்படுவது கடுமையான போட்டியை உருவாக்குவதுடன், தொடர்ந்து தேர்வுகளை எழுதி வரும் இளைஞர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் கூடுதல் பணியிடங்களைச் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



