நாடு முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாட்டில் குடிநீர் பிராண்டுகளில் ஒன்றான பிஸ்லரி தொடர்பாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் குடிநீர் மாதிரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறிய ரசாயனங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளது.
இந்த விவகாரம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிஸ்லரி நிறுவனம் தனது தரப்பிலான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
குடிநீர் மாதிரியில் கண்டறியப்பட்ட ரசாயனம் என்ன?
பிஸ்லரி நிறுவனத்தின் கோவா உற்பத்தி ஆலையில் இருந்து கடந்த 2025 செப்டம்பர் மாதம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். மொத்தம் ஆறு மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்குள் இருந்ததாகவும், ஒரு மாதிரியில் புரோமேட் (Bromate) என்ற ரசாயனத்தின் அளவு அதிகமாக இருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீரில் புரோமேட் அளவு அதிகபட்சமாக 10 மைக்ரோகிராம் இருக்க வேண்டும். ஆனால் பரிசோதிக்கப்பட்ட மாதிரியில் 12 மைக்ரோகிராம் அளவு பதிவானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தக் குடிநீர் மாதிரி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது.
மறுபரிசோதனையிலும் சிக்கல்!
முதற்கட்ட ஆய்வு முடிவுகளை எதிர்த்து பிஸ்லரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குடிநீர் மாதிரி பரிந்துரை உணவு ஆய்வகத்திற்கு (Referral Food Laboratory) அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட மறுபரிசோதனையில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்ததாகவும், அதே நேரத்தில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) என்ற வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருட்களில் சில புற்றுநோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் பிஸ்லரி நிறுவனத்திற்கு எதிராக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் வழக்குத் தொடர FSSAI அனுமதி வழங்கியுள்ளது.
பிஸ்லரி நிறுவனம் அளித்த விளக்கம் என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பிஸ்லரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது குடிநீர் தயாரிப்பு பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பிரச்சினை 2025 செப்டம்பர் மாதம் கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட குடிநீர் மாதிரி தொடர்பானது என்றும் விளக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட மாதிரியை FSSAI அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஆய்வகத்திலும் தனியாகப் பரிசோதனை செய்ததாகவும், அந்த ஆய்வில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்ததாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை 2026 பிப்ரவரி 2ஆம் தேதி FSSAI மேற்கு மண்டல அலுவலகத்திற்கு அனுப்பியதாகவும், அதன் பிறகு தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், FSSAI அனுப்பியதாகக் கூறப்படும் நோட்டீஸ் இதுவரை தங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ கிடைக்கவில்லை என்றும் பிஸ்லரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள்!
தங்களது குடிநீர் தயாரிப்பு நடைமுறையில் 10 கட்ட சுத்திகரிப்பு செயல்முறைகள் பின்பற்றப்படுவதாகவும், 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குடிநீரின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அனைத்து பிஸ்லரி பாட்டில்களும் பாதுகாப்பற்றவையா?
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. FSSAI ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட குடிநீர் மாதிரி தொடர்பான புகாராகும்.இதன் அடிப்படையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிஸ்லரி குடிநீர் பாட்டில்களும் பாதுகாப்பற்றவை என்று முடிவெடுக்க முடியாது.
அதேபோல், நிறுவனத்தின் விளக்கத்தின் அடிப்படையில் ஆய்வகத்தின் பாதுகாப்பு குறித்த கண்டறிதல்களையும் புறக்கணிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும், ஆய்வு முடிவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. பிரபலமான குடிநீர் நிறுவனத்தின் தயாரிப்பு தொடர்பாக எழுந்துள்ள இந்த விவகாரம், பாட்டில் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.



