மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது முதல், அண்ணாமலைக்கு எந்த வகையான மாநில அல்லது தேசிய பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையில் மட்டுமே அவர் பாஜவில் உள்ளார். இதனால் கட்சி சார்பான நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறாமல் இருந்துவருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே சில மோதல் போக்கு நிலவி வருகிறது.
அண்ணாமலை இருந்தபோது பாஜக ஒவ்வொரு நாளும் பேசப்பட்டது. இப்போது கட்சி குறித்து ஊடகங்களில் பேசப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நயினார் தலைமையில் கட்சியின் வேகம் குறைந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். அதே சமயம், நயினாரின் நிதானமான பேச்சும், சமநிலையான அணுகுமுறையும் கட்சியில் அமைதியை உருவாக்கியதாக அவர் தரப்பு விளக்கம் அளிக்கிறது.
இதற்கிடையே தீவிர அரசியலில் இருந்து விலகிய அண்ணாமலை ஆன்மீக பயணம், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது போன்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் திமுக அரசுக்கு எதிராக அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த அனுகுமுறை பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக ஊடகங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், பாஜக டெல்லி தலைமைக்கு நயினாரின் செயல்பாட்டில் திருப்தியாக உள்ளதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை இருந்தபோது கட்சி வாக்கு சதவீதம் உயர்ந்தது. இதனால், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கலாமா என்ற ஆலோசனையில் மத்திய பாஜக ஈடுபட்டுள்ளது. ஆனால் உடனடியாக தலைமை மாற்றம் நடக்கும் வாய்ப்பு குறைவு என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Read more: 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை..!! முதல் நாடாக சட்டம் இயற்றியது ஆஸ்திரேலியா..!!



