மலேசியாவின் லங்காவியில் விடுமுறையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, பாஜக மீண்டும் அவரை குறிவைத்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தியின் புகைப்படத்தை X-இல் பகிர்ந்தார். அதில் அவர் வெள்ளை தொப்பி மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து இருந்தார்.
அந்த பதிவில், பீகாரின் அரசியல் வெப்பம் மற்றும் தூசி ராகுல் காந்திக்கு அதிகமாகிவிட்டது, அதனால் அவர் உடனே ஓய்வு எடுத்துவிட்டார், அல்லது இது யாருக்கும் தெரியாத ரகசிய சந்திப்புகளில் ஒன்றா என்ற கேள்வி எழுப்பினார். மேலும், “மக்கள் உண்மையான பிரச்சினைகளில் போராடிக்கொண்டிருக்கையில், ராகுல் காந்தி வெளிநாட்டு விடுமுறையில் இருப்பதில் ஆர்வம் காட்டுகிறார்” என்று கடுமையாக சாடினார்.
ராகுல் காந்தி சமீபத்தில் பீகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தியிருந்தார். செப்டம்பர் 1-ஆம் தேதி அந்த யாத்திரை நிறைவடைந்தது. சுமார் 1,300 கிலோமீட்டர், 25 மாவட்டங்கள், 110 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக சென்ற அந்த யாத்திரைக்குப் பிறகு, அவர் லங்காவிக்கு விடுமுறைக்குச் சென்றார். இது முதல் முறை அல்ல. ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களைப் பற்றி பாஜக முன்பும் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அவர் வியட்நாம் சென்றிருந்தார். அப்போது கூட பாஜக விமர்சனம் செய்தது. “எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிலையில் ரகசியமான வெளிநாட்டு பயணங்கள் பொருத்தமற்றவை” என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். தேர்தல் நெருங்கும் சூழலில், ராகுல் காந்தியின் லங்காவி விடுமுறை புகைப்படம், பாஜக-காங்கிரஸ் இடையிலான அரசியல் மோதலை மீண்டும் சூடுபடுத்தியுள்ளது.
Read more: “இறப்பது சட்டவிரோதம்” வினோத வழக்கத்தை இன்றும் பின்பற்றும் நகரம்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!