உத்தரபிரதேச பாஜக மண்டலத் தலைவர் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணையும், அவரது சிறுவயது மகனையும் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை காலை இரண்டு பெண்களுக்கு இடையே மின்சார கம்பி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரித்தபோது, பாஜக மண்டலத் தலைவர் அதீக் பதான் தலையிட்டு, மற்றொரு தரப்பினர் மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்தியுள்ளார். அதிர்ச்சியூட்டும் காட்சிகளை அருகில் இருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.
அந்த வீடியோவில் ஒரு பெண் மற்றும் அவரது சிறிய மகனை பாஜக தலைவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் கண்டம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டத்தை பதிவு செய்த உத்தரபிரதேச காங்கிரஸ், பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக விமர்சித்தது.
அந்த பதிவில், “ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் செருப்பு மற்றும் குச்சிகளால் அடிக்கும் இந்த வெட்கமற்ற நபர் ஒரு பாஜக தலைவர். முதல்வர் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடானது” என்று பதிவிட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, நொய்டா காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 30, 2025 அன்று, டான்கவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிலாஸ்பூர் பகுதியில் மின்சாரக் கம்பியை வெட்டுவது தொடர்பாக இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில், அதீக் பதான் அந்த விவாதத்தில் தலையிட்டு, மற்றொரு தரப்பு பெண் மற்றும் சிறுவன் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து டான்கவுர் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், அதீக் பதான் கைது செய்யப்பட்டு, தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Read more: 2026 பத்ம விருதுகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!