கர்நாடக மாநிலத்தின் அவுராத் சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ பிரபு சவான்-வின் மகன் பிரதீக் சவான் மீது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்துள்ள சம்பவம், இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணும் பிரதீக் சவானும் சமூக வலைதளங்கள் வாயிலாக பழகி, பின்னர் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரது குடும்பங்களின் சம்மதத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயதார்த்தமும் நடைபெற்றதாக பெண் தரப்பில் கூறப்படுகிறது. திருமணம் செய்வதாக கூறி, பிரதீக் பல்வேறு இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றும், பாலியல் உறவிற்கு அழுத்தம் கொடுத்தும், துஷ்பிரயோகமான முறையில் பயன்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி பிரதீக் சவான் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் பிரதீக் சவானின் மீது பாலியல் குற்றச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், பாஜக எம்எல்ஏ மகன் கூறுவது அத்தனையும் பொய். எனக்கு வேறு யாருடனும் தொடர்பு கிடையாது. அவர் பிரதமர் மோடி உள்துறை மந்திரி உள்ளிட்டோர் முன்னிலையில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் தான் அவருடன் பழகினேன்.
என்னை அவர் பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக எம்எல்ஏ மகனுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக அந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.