79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
இந்த சுதந்திர தினத்தை நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் பண்டிகை என்று வர்ணித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வலிமையுடன் முன்னேறி வருவதாகவும், தாய்நாட்டை போற்றுவதில் நாடு ஒன்றுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்களுக்கும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண் சக்திக்கும் அவர் வணக்கம் செலுத்தினார்.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்:
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு இந்திய ஆயுதப் படைகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். அந்த நடவடிக்கையில் ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்ததாகவும், பாகிஸ்தானின் தீவிரவாத தலைமையகங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானின் அணுகுண்டு மிரட்டல்களை இனி சகிக்கமாட்டோம் என்றும் எச்சரித்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து நிலைப்பாடு:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்து பேசிய பிரதமர், “இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது” என்றார். இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்றும், எதிரி நாட்டின் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப்படும் தண்ணீர் இப்போது இந்திய விவசாயிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு:
சுதந்திரத்திற்குப் பின் பசி ஒரு பெரிய சவாலாக இருந்தபோது விவசாயிகள் தேசத்தை மீட்டதாக பிரதமர் நினைவுபடுத்தினார். இப்போது உணவுப் பாதுகாப்பில் இந்தியா சுயசார்பு பெற்றுள்ளதாகவும், உண்மையான சுதந்திரம் சுயசார்பே என்றும் அவர் வலியுறுத்தினார். இறக்குமதி-ஏற்றுமதியைத் தாண்டி, நாட்டின் திறன்களை விரிவுபடுத்த வேண்டும் எனவும் மக்களை கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் முன்னேற்றம்:
புதிய தலைமுறையின் வளர்ச்சிப் பாதை தொழில்நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்ட பிரதமர், செமிகண்டக்டர்கள் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். “செமிகண்டக்டர் உற்பத்தி பணி முழு வேகத்தில் நடைபெறுகிறது. விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப்கள் உலக சந்தையை நிரப்பும்” என்றார்.
சுத்தமான எரிசக்தி சாதனைகள்:
சுத்தமான ஆற்றல் துறையில் இந்தியா மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சூரிய சக்தி பயன்பாட்டில் 30% உயர்வை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அணைகள் கட்டும் முயற்சிகளும் சுத்தமான ஆற்றலை அதிகரிக்க நடைபெற்று வருகின்றன. சுத்தமான எரிசக்தி இலக்கை, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
Read more: “மொத்த சத்தும் இதுல தான் இருக்கு”..!! ஈசல் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள்..!!