சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள், விமானநிலையம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மர்ம நபர்கள் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டுக்கும், சென்னை தியாகராயா் நகரில் உள்ள கட்சித் தலைவா் அன்புமணி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவா்கள் இவருவரின் வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிரட்டல் வந்தது.
இதையடுத்து, ராமதாஸ், அன்புமணி வீடுகளில் போலீஸார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



