கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி, களாம்பக்கத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் – விஜயாஸ்ரீ, கடந்த மாதம் 15-ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டு நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காரில் வந்தவர்கள் களாம்பாக்கம் வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திரசந்த் என்ற சிறுவனை கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை, கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாக அவரிடம் விசாரணை நடத்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் திருவள்ளூர், வெள்ளவேடு, நாசரத்பேட்டை இன்ஸ்பெக்டர்கள், பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றனர். இதையடுத்து அக் கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் 3 போலீசார் மட்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டினுள் சென்று அனைத்து அறைகளிலும் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ உள்ளாரா என்று சோதனை செய்தனர். அவர் இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை 2வது நாளாக நேற்றும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கும் ஜெகன் மூர்த்தி அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக அவரும் நேரடியாக எங்களிடம் பேசவில்லை. நாங்களும் பேசவில்லை என சிறுவனின் தாயார் வீடியோ மூலம் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பல்வேறு கேள்வியை எழுப்பி உள்ளார். இந்த சம்பவத்தை பொறுத்தவரை, இளைஞரின் தம்பியை கடத்தியது யார்..? ஜீப்பில் சென்ற 5 பேர் யார்..? ஒரு எஸ்ஐ யாருடைய அனுமதியும் இல்லாமல் போலீஸ் ஜீப்பை எடுத்து செல்ல முடியும்..? எப்ஐஆரில் ஜீப் நம்பரையும் பதிவு செய்யவில்லை. செந்தில்குமாரை எதற்காக சஸ்பெண்டு செய்ய வேண்டும்..? செந்தில்குமாரை அனுப்பியது யார்..? செந்தில்குமார் குற்றவாளியே கிடையாது. அவர் வெறும் அம்புதான் என தெரிவித்துள்ளார்.