மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் 18 வயதான நர்சிங் மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் நேற்று மருத்துவமனையில் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் மாணவியை சரமாரியாக தாக்கினார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் இருந்த போதிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த இளைஞனும் தற்கொலை செய்ய முயன்றார். இருப்பினும் தற்கொலை முயற்சி தோல்வி அடைந்ததால் இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.சம்பவத்தை வேடிக்கை பார்த்த மருத்துவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது.
இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.