முதல்வர் விஜய்யின் தொகுதியிலேயே மின்வெட்டு.. தவெக அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.. டிடிவி தினகரன் சாடல்..!

ttv dinakaran vijay

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது..


இந்த நிலையில் மின் வெட்டு தொடர் பிரச்சனையாக மாறி உள்ளது.. அந்த வகையில் நேற்று முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..

இந்த சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மின்வெட்டு பிரச்சனை குறித்து தவெக அரசை சாடி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் சட்டமன்றத் தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

Breaking : 21 பேரின் பதவி தப்பியது.. அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு..!

Tue Jun 9 , 2026
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]
jcd prabakar

You May Like