செங்கல்பட்டு அருகே உள்ள மேலச்சேரியில், 28 வயதான மணிகண்டன் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வரும் இவருக்கும் கண்டிகையில் வசித்து வரும் ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது நான்கரை வயதான ஆல்வின் ஜோ என்ற மகனும், ஒரு வயதான அகஸ்டின் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று, வழக்கம் போல் ஜாய்ஸ் தனது மகன் அகஸ்டினுக்கு வீட்டிற்கு வெளியே அமர்ந்து உணவளித்துள்ளார்.
குழந்தைக்கு உணவளித்த பின்னர், ஜாய்ஸ் தனது குழந்தையை வீட்டின் வெளியே விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது, அவர் விட்டுச்சென்ற குழந்தை அகஸ்டின் அங்கு இல்லை. இதனால் பதறிப்போன அவர், தனது மகனை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது அகஸ்டின், வீட்டின் அருகே உள்ள தெரு வடிகாலில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில், தலைகீழாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன தாய், கதறி துடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, குழந்தை அகஸ்டினை உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை அகஸ்டின், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். சம்பவம் குறித்து செங்கல்பட்டு பாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் அலட்சியத்தால் பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம், மேலச்சேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: பெற்றோர்களே எச்சரிக்கை!!! பள்ளி வேனில் இருந்து இறங்கிய 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..