சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2344 நபர்கள் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதில் நாளது தேதிவரை 445 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) 1299 பணிக்காலியிடங்களுக்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 03.05.2025 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.04.2025 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு போட்டித் தேர்வுகளில் அனுபவம் கொண்ட சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
மேலும், இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு. இலவச மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காவல் சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.