நடப்பாண்டு, தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது. தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில், சென்ற கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இத்தகைய நிலையில், மதுரையில் இருக்கின்ற விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரே மாதிரியான கையெழுத்து இருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல, இருவரும் முழுமையான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. ஆகவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு விடைத்தாள்களும், மதுரையைச் சேர்ந்த ஒரே பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களுடையது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்ததும் தற்போது தெரியவந்திருக்கிறது. அத்துடன், பொதுத்தேர்வு நடைபெற்ற போது, அந்த பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என்ற தகவலும் தற்போது கிடைத்திருக்கிறது.
ஆகவே அந்த மாணவர்கள் தேர்வெழுதியபோது, கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்தும் முகாமில், ,விடைத்தாளை கலக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று 15க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு அழைக்கப்பட்டு, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.