திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், சென்னையில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது காதலன் சொல்வதை எல்லாம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நான் உன்னை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் போன்ற ஆசை வார்த்தைகளை கூறி, ஜெகதீஸ்வரன் சிறுமியை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய சிறுமியும், சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு தனியாக சென்றுள்ளார். தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதும், ஜெகதீஸ்வரனை சிறுமி செல்போனில் அழைத்துள்ளார்.
ஆனால், ஜெகதீஸ்வரன் சிறுமியின் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் செய்வதறியாது தவித்த சிறுமி, பேருந்து நிலையத்திலேயே அழுதபடி நின்றுள்ளார். சிறுமி தனியாக பேருந்து நிலையத்தில் அழுது கொண்டிருப்பதை, தஞ்சாவூரை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற இளைஞர் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர் சிறுமியிடம் நல்லவன் போல் பேசியுள்ளார்.
இதையடுத்து, அவர் அந்த சிறுமியிடம் இன்று இரவு எனது வீட்டில் தங்கி விட்டு, காலையில் காதலன் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். மேலும், தனது வீட்டில் தனது மனைவியும் இருப்பதாக கூறி நம்ப வைத்துள்ளார். இதனை நம்பிய சிறுமியும் புவனேஸ்வரனுடன் சென்றுள்ளார். ஆனால், அவரது வீட்டில் யாரும் இல்லை. அவரது மனைவி ஊருக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, புவனேஸ்வரன் 3 நாட்களாக சிறுமியை தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஊருக்கு சென்ற மனைவி திரும்பி வர இருந்த நிலையில், சிறுமியை புவனேஸ்வரன் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் புவனேஸ்வரனையும், காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் ஜெகதீஸ்வரனையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.