கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020-21 அரவைப்பருவத்தில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, மாநில அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு 192.50 ரூபாய் வழங்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளால், தற்போது கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, 2021-22ஆம் அரவைப்பருவத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,755 உடன் கூடுதலாக, மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் வழங்கும் வகையில், 199 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன், மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையும் சேர்த்து டன் ஒன்றுக்கு 2,950 ரூபாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.