Tiger: கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மானந்தவாடி நகராட்சியில் 48 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி பஞ்சராகொல்லி பகுதியில், 2 நாட்களுக்கு முன் காப்பி தோட்டத்திற்கு பணிக்கு சென்ற ராதா என்பவரை புலி தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேட்டும், சம்பந்தப்பட்ட புலியை சுட்டு கொல்ல வேண்டும் எனவும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட புலியை பிடிக்க வனத்துறையினர் மற்றும் RRT குழுவினர் என ஏழு குழுவினர் இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வனத்தில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டிருந்த RRT குழுவை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் மீது புலி பாய்ந்தது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புலியை கண்டால் சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மானந்தவாடி நகராட்சிக்கு உட்பட்ட பஞ்சரா கொல்லி, மேல சிலக்கரை , பிலாகாவு, முன்று ரோடு, மணியன் குண்ணு போன்ற பகுதிகளுக்கு 48 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிமுதல் 48 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அங்கன்வாடிகள், மத தலங்கள் மற்றும் டியூஷன் மையங்கள் மூடப்படும். பாதிக்கப்பட்ட பிரிவுகளில் வசிக்கும் மற்ற இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் விடுமுறை. மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும், கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
Readmore: இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அனுப்ப டிரம்ப் உத்தரவு!. பைடனின் தடையை நீக்கி அதிரடி!