தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தின் மாதாந்திர தேவை 440 மெட்ரிக் டன் எனவும், இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில், 21.01.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தருமபுரி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ராகி நோடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து ராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அதே போல் பென்னாகரம் வட்டத்தில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நோடி கொள்முதல் நிலையமும், அரூர் வட்டத்தில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நோடி கொள்முதல் நிலையமும் திறந்து ராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.
சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஒளி நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். விற்பனைக்கு கொண்டுவரும் ராகி சிறுதானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக கொண்டு வர வேண்டும். மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3578/- என்ற அடிப்படையில் தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்.
நோடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் மாலை 2.30 மணிமுதல் 6.30 மணி வரையிலும் செயல்படும். தமிழ்நாடு அரசின் இந்த அரிய வாய்ப்பினை ராகி சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும், மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் கீழ்கண்ட தொடர்பு எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
