வட மாநிலங்களை பொறுத்தவரையில், பல மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களின் மூலமாக மனிதர்களை தண்டிக்கும் செயல் இன்றளவும் இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மனிதாபிமான அடிப்படையில், இருக்க வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், வட மாநிலங்களில் எதையுமே யோசிக்காமல், ஒருவர் தவறு செய்து விட்டார் என்ற காரணத்திற்காக, அவரை கொடூரமான முறையில் தண்டிப்பது போன்ற அட்டூழியங்கள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம், மத்திய, மாநில அரசுகள் கண்டும், காணாமல் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில், திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், இரு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவருடைய ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்து, மேலும், பலவந்தமாக ஊசிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த கொடூர செயலுக்கு ஆளான சிறுவர்கள் இரண்டு பேரும், 10 முதல் 15 வயது ஆன சிறுவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில், அந்த சிறுவர்களை பச்சை மிளகாயை சாப்பிட வைத்தும், ஒரு பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை குடிக்க வைத்தும் ஒரு கும்பல் அவர்களை கொடூரமான முறையில், துன்புறுத்துவதை நம்மால் காணப்படுகிறது. மேலும் தாங்கள் சொல்வதை போல செய்யவில்லை என்றால், அடித்து விடுவோம் என்றும் அந்த சிறுவர்களை மிரட்டி இருக்கிறார்கள்.
மேலும், அந்த சிறுவர்களின் ஆசனவாயில், பச்சை மிளகாயை, அவர்கள் தேய்த்ததால், அலறி துடித்த சிறுவர்களுக்கு, மஞ்சள் நிற திரவம் போன்ற ஏதோ ஒன்றை, ஊசியின் மூலமாக செலுத்துகிறார்கள்.
கடந்த நான்காம் தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோ, அந்த மாவட்டத்தின் பத்ரா பஜார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, கொங்கட்டி சவுராக்காவுக்கு அருகில் இருக்கின்ற அர்ஷா சிக்கன் கடையில் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரமும் தற்போது தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பற்றி அறிந்து கொண்டு, காவல்துறையினர் உடனடியாக இது குறித்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ததாக, காவல்துறையினர் தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் எனவும், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த்தா தெரிவித்துள்ளார்.