பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்; போதைப்பொருள் அதிகளவில் பிடிபடும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆள்பவை. தமிழ்நாடு அந்த பட்டியலில் இல்லை. அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறி தமிழ்நாட்டு மக்களையும் இளைஞர்களைப் பற்றியும் அவதூறு செய்வது ஏன்..?
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்…? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்..? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்..? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன..?
ஒரு மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடுதான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜகதான் எடுத்துக்காட்டு. 32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 1977 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.