கர்நாடக மாநிலம் பெங்களூரில் நண்பர்களுடன் பார்ட்டி செய்த 27 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பத்தரஹல்லி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் திவ்யன்சு ஷர்மா. 27 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் பப் சென்று வந்திருக்கிறார். பின்னர் இவரும் இவரது நண்பர்களும் வீட்டில் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு 2:30 மணியளவில் வீட்டை சுத்தம் செய்து சிகரெட் துண்டுகளை வெளியே வீசி எறிவதற்காக பால்கனி வந்ததாக தெரிகிறது. அப்போது நிலை தடுமாறி 33 வது மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து அதிகாலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பார்ட்டியின் போது 27 வயது இளைஞர் மாடியிலிருந்து விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.