சீனாவில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. அதேபோல், சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.70 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு, அதாவது சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்திடம் செய்தி ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை சீனஅரசு உடனடியாக தளர்த்தியது தான் இந்த அளவிற்கு கொரோனா பரவல் அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளதால் மயானங்களில் பிணங்களை தகனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.