ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த 3 வழக்குகளில், அவரது வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1995ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்திற்காக 59 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறி, அந்த தொகையை, 1996-97ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான, ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சேர்த்து மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டார். இந்த செலவை, 12 எம்.பி., எம்எல்ஏக்களும் சேர்ந்து 57 லட்சம் ரூபாயை செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, பழைய உத்தரவை ரத்து செய்துவிட்டு, புதிதாக மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் மதிப்பீட்டு அதிகாரி விசாரணை நடத்தியபோது, ஜெயலலிதா தான் செலவு செய்தார் என தீர்மானித்து உத்தரவு பிறப்பித்தார். அதை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீப்பாயம் ரத்து செய்தது. இதேபோல சுதாகரன் திருமண நிச்சயதார்த்தத்தின் போது ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுக்கப்பட்டது, ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்க்கப்பட்டது. இதையும், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. 1997-98இல் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, ஆவணங்களின் அடிப்படையில் அசையும் சொத்துகள் ரூ.4 கோடி என வருமான வரித்துறை தீர்மானித்தது. இதிலும், ஜெயலலிதா மனுவை ஏற்று, ஆணையர் உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த 3 உத்தரவுகளையும் எதிர்த்து, வருமான வரித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் 3 வழக்குகளை தொடந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதா காலமானதால், இந்த 3 வழக்குகள் குறித்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.