நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் இன்ரு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவை கூடியதும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். ஒரு மாநில அரசுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக பள்ளி நிதியைப் பயன்படுத்துவது நியாயமானதா என்று திமுக எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர்.
“எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்..
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் நாட்டை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார். மக்களவையில் இந்தி திணிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற திமுக தலைவர்களின் குற்றச்சாட்டை பிரதான் மறுத்தார்.
கேள்வி நேரத்தின் போது, தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையில் திமுக தலைமையிலான தமிழக அரசு திடீரென தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டதாக தர்மேந்திர பிரதான் விமர்சித்தார், அவர்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டினார். திமுகவினரின் நிலைப்பாடு “நாகரிகமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் திமுகவினர் தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். திமுக மாணவர்களின் எதிர்காலத்தை பாழக்குகிறது.. அவர்கள் தமிழக மக்களுக்கு நேர்மையற்றவர்கள், ”என்று பிரதான் கூறினார்.
இதையடுத்து பேசிய திமுக எம்.பி கனிமொழி “ மும்மொழி கொள்கையை திமுக ஒருபோதும் ஏற்காது. தமிழ்நாடு எம்.பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று அமைச்சர் கூறியது புண்படுத்துகிறது. மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக எம்பிக்கள் சார்பில் உரிமை மீறல் நோட்டிஸ் அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து தான் பேசியது புண்படுத்தி இருந்தால், அந்த கருத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மும்மொழி கொள்கை – என்ன பிரச்சனை?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி ஃபார்முலாவின் மூலம் இந்தி மொழியை மாநிலத்தின் மீது திணிக்க முயற்சிப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தி திணிப்பு சர்ச்சை, திமுகவிற்கும், மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழக பாஜக பிரிவுக்கும் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது.